

சென்னை: புழல் பகுதியில் கிருஷ்ணர் கோயில் அர்ச்சகர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அக்கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
புழல் லட்சுமிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோயிலின் அர்ச்சகராக அதேபகுதியைச் சேர்ந்த குணசேகரன் (75) என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 29-ம் தேதி இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது, அங்கு தயாராக நின்றிருந்த அந்தகோயில் நிர்வாகிகளில் ஒருவரான கோபால் என்பவர், குணசேகரனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காயம் அடைந்த குணசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மறுநாள் காலை, தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார்தெரிவித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப்பதிந்து, சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், குணசேகரன் தாக்குதலுக்கு உள்ளானது தெளி வாகத் தெரிந்தது.
இதையடுத்து தாக்குதல் நடத்தியதாக கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
முன்விரோதத்தால் தாக்குதல்: கடந்த வாரம் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த திருக்கோயிலில் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுள்ளன. இந்த சிறப்புப் பூஜைகளுக்கு அந்த கோயிலின் முக்கிய பொறுப்பில் இருந்த கோபாலுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.
மேலும் பல விவகாரங்களில் கோபால் புறக்கணிக்கப்பட்டாராம். இதற்குக் காரணம் கோயில் அர்ச்சகர் குணசேகர்தான் என கோபால் நினைத்து அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனால், ஏற்பட்ட முன் விரோதத்தில் 29-ம் தேதி குணசேகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தாக்கப்பட்ட காயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக குண சேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.