

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், இளம் பெண்ணிடம் மது போதையில் அத்து மீறியது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை ரயில் நிலைய நடை மேடையில் கடந்த 25-ம் தேதி இளம் பெண்ணான மென் பொறியாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சாதாரண உடையில் சென்ற ஆண் ஒருவர், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட மென் பொறியாளரிடம் எல்லை மீறியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அவரது செய்கையால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அப்பிரிவு போலீஸார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் குறித்து அறிந்த சென்னை காவல் ஆணையர் அருண், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தென் சென்னை காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக்குமார் மேற்பார்வையில், சைதாப்பேட்டை போலீஸார் விசாரித்தனர்.
இதில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் மென் பொறியாளரிடம் அத்து மீறியது சைதாப்பேட்டை குற்றப் பிரிவு காவலர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் அவருக்கு அங்கு பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும் உறுதியானது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் கமலக் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.