சென்னை | போதையில் ஆடியவர்களை தடுத்து நிறுத்தியதால் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு: 6 பேர் கைது

சென்னை | போதையில் ஆடியவர்களை தடுத்து நிறுத்தியதால் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு: 6 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் முண்டகக்கன்னி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது.

விழா நடந்துகொண்டிருந்தபோது, சிலர் மதுபோதையில் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஒருவர், மறைத்து வைத்திருந்த பிளேடால், பணியில் இருந்த பெண் காவலர் கவுசல்யாவின் வலது கையில் வெட்டினார்.

காயமடைந்த பெண் காவலரை, பணியில் இருந்த மற்ற காவலர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கையில் 5 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மதுபோதையில் ஆடிய ஸ்ரீதர்(22), அஜய் ராகுல்(23), கிஷோர்(19), சசிகுமார்(20), சரவணன் (20), மணிகண்டன்(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், பெண் காவலரைபிளேடால் வெட்டியது அஜய் என்பதும்விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in