உ.பி. பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: 2 பேர் மும்பையில் கைது

உ.பி. பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: 2 பேர் மும்பையில் கைது

Published on

லக்னோ: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது 4 மைனர் குழந்தைகளை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. மாநில குஷிநகர் காவல் துறை அதிகாரி குந்தன் குமார் சிங் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் வசித்த ஒரு பெண்ணின் வீட்டருகில் குடியிருப்பவர்கள் 30 வயதுடைய அப்துல் சத்தார், தாஹிர் அன்சாரி. இவர்கள் இருவரும், மும்பையில் கூலி வேலைசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது வீட்டருகே வசித்த ஒரு பெண் மற்றும் அவரது 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளை தங்களுடன் மும்பைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் அந்தப் பெண் மற்றும் அவரது குழந்தைகளின் போலி ஆதார் அட்டைகளை தயாரித்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியை காணவில்லை என்று அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் அடிப்படையில் அந்தப் பெண் மற்றும் அவரது 4 மைனர் குழந்தைகள் மும்பையிலிருந்து உ.பி. போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், கட்டாய மதமாற்றம் செய்ததாக அப்துல் சத்தார்,தாஹிர் அன்சாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு குமார் சிங் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in