Published : 23 Aug 2024 05:35 AM
Last Updated : 23 Aug 2024 05:35 AM

சென்னை | மத்திய உளவு பிரிவு போலீஸ் சோதனையில் சிம்கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய கால் சென்டர் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னையில், சிம்கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய கால் சென்டரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அதன் நிர்வாகிகளை தேடி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 5 ஆண்டுகளாக தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 800 பேர் பணியாற்றுகின்றனர். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன்களை திருப்பிச் செலுத்தும்படி அறிவுறுத்துவார்கள்.

இந்நிலையில், மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செல்போன் சிம்கார்டுகளை, சிம் டூல் பாக்ஸை பயன்படுத்தி, சட்ட விரோதமாக அதிக லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்தியஉளவுப் பிரிவு (ஐ.பி) போலீஸாருக்கும் புகார்கள் சென்றன.

இதையடுத்து, அப்பிரிவு டிஎஸ்பி பவன் மற்றும் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கால் சென்டரில் நேற்று முன்தினம் திடீர் சோதனைநடத்தினர். 6 மணி நேரத்துக்கும்மேலாக நடந்த இந்த சோதனையின்போது சிம்கார்டுகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர். நுங்கம்பாக்கம் காவல் சரக உதவிஆணையர் அருண் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சட்ட விரோதமாகப் பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கால் சென்டர்உரிமையாளர் மற்றும் பொறுப்பாளரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x