சென்னையில் சிம் கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்திய கால் சென்ட்டரில் உபகரணங்கள் பறிமுதல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் சிம்கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய கால் சென்ட்டரை மத்திய உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாக உள்ள அதன் நிர்வாகிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 5 ஆண்டுகளாக தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 800 பேர் பணியாற்றுகின்றனர். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனி நபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன்களை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்துவார்கள். இந்நிலையில், இந்நிறுவனத்தினர் மத்திய அரசின் விதி முறைகளை மீறி செல்போன் சிம் கார்டுகளை, சிம்டூல் பாக்ஸில் பயன்படுத்தி, சட்ட விரோதமாக அதிக லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) போலீஸாருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து, அப்பிரிவு டிஎஸ்பி பவன் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கால்சென்டரில் திடீர் சோதனை நடத்தினர். 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் போது சிம் கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

நுங்கம்பாக்கம் காவல் சரக உதவி ஆணையர் அருண் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் விரைந்து சட்ட உவிரோதமாக பயன்படுத்திய சிம்டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கால் சென்டர் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in