நாடு முழுவதும் ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் விசாரணை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நாடு முழுவதும், நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இ-மெயில் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் தனிநபர் பெயரிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலியான இணையதள முகவரியை உருவாக்கி் அதன் மூலம் மின்னஞ்சல் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அவர்களை தனிப்படை அமைத்து சென்னை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சர்வதேச போலீஸாரின் உதவியையும் போலீஸார் நாடி உள்ளனர். இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் சுமார் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து ஷாப்பிங் மால் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் காவல் நிலைய போலீஸார், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். வணிக வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் மெட்டர் டிடெக்டர் மூலமூம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இதையடுத்து, புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்தும் தனிப்படை போலீஸார் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் துப்பு துலக்கி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in