துபாய், அபுதாபியில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: துபாய், அபுதாபியில் இருந்து ரூ.5.2 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கத்தை சென்னைக்கு கடத்திவர திட்டமிட்ட நபர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை பெங்களூருக்கு மாற்றியதால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பெங்களூரு சென்று தங்கத்தை பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.

துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த ஒரு பயணியையும், அபுதாபியில் இருந்து சென்னை வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த மற்றொரு பயணியையும், தங்களுடைய டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, துபாய், அபுதாபியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகளை மாற்றியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சென்னையை சேர்ந்த அந்த இரண்டு பயணிகளும், சென்னை வராமல், பெங்களூருக்கு எதுக்கு செல்கிறார்கள் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இருவரும் தங்கம் கடத்தி வருவதும், தகவல் வெளியில் தெரிந்துவிட்டதால், தங்களுடைய டிக்கெட்டுகளை பெங்களூருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படையினர் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு விரைந்தனர். துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்ததும், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமானத்தில் இருந்து இறங்கி வந்த சென்னை பயணிகள் இருவரையும் அதிகாரிகள் மடக்கி பிடித்து, தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.5.52 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தியதில், துபாய், அபுதாபியில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள், தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து குருவிகளாக மாறியிருப்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தங்கத்தை பெற்றுச் செல்வதற்காக பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சென்னை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in