

சென்னை: சென்னை சூளை, அஷ்டபுஜம் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயலட்சுமி (27). இவர் கணவரைப்பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில்வசித்து வருகிறார். ஸ்பா சென்டரில் வேலை செய்தபோது பெரம்பூர், நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் ரூபன் சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். பின்னர் சமாதானம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கணவன், மனைவி எனக் கூறி திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ரூபன், ஜெயலட்சுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த ரூபனை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.