

சென்னை: மறைந்த தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூரைச் சேர்ந்த நர்சரி பள்ளி தாளாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குடும்பத்துக்கு அண்மையில் தபால் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கடித முகவரியை வைத்து படூர் விரைந்த செம்பியம் தனிப்படை போலீஸார், சதீஷ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் மிரட்டல் கடிதத்துக்கும் அந்த நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.
சாட்சி சொல்வதைத் தடுக்க.. இதனிடையே, கடலூரைச் சேர்ந்த நர்சரி பள்ளி ஒன்றின் தாளாளர் அருண்ராஜ் என்பவரின் குற்றவழக்கில், சதீஷ் சாட்சியாக இடம் பெற்றிருந்தார். அவர் சாட்சி சொல்ல வருவதைத் தடுக்க சதீஷை போலீஸில் மாட்டிவிட திட்டமிட்டு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அருண்ராஜை செம்பியம் போலீஸார் கைது செய்தனர்.