சென்னை | ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னை | ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்
Updated on
1 min read

சென்னை: தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணம் செய்த நந்தனம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்களும், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, திடீரென மோதிக் கொண்டனர். அப்போது, ரயில் பாதையில் உள்ள கற்களை எடுத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் ரயிலின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. மாணவர்கள் தங்கள் கைகளில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்தச் சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர் மாம்பலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் வருவதற்குள் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரு கல்லுாரி மாணவர்கள் கற்களை வீசி தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவி வருகிறது. இதற்கிடையே, ரயில்வே போலீஸார் இரு கல்லுாரிகளின் நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in