

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி காவல் உட்கோட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்திய கடற்படை வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவியர் கல்வி பயில்கிறார்கள். அருகிலுள்ள மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது சாப்பாட்டுப் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து நாங்குநேரியை சேர்ந்த சக மாணவர் மீது சிந்தியதாகவும், அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், நாங்குநேரியை சேர்ந்த மாணவர், இன்று தனது வீட்டில் இருந்து சிறிய ரக அரிவாள் ஒன்றை எடுத்து வந்து தன் மீது தண்ணீரை சிந்திய சக மாணவரின் தலையில் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். காயமடைந்த மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விஜயநாராயணம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.