

சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமை (ஆக.2) காலை லாரி மோதி உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலுக்கு ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடிவெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்தனர்.
இன்று அதிகாலை சாத்தூர் அருகே நல்லி பகுதியில் அவர்கள் வந்தபோது, நெல்லையில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மகேஸ், (35) பவுன்ராஜ் (45) முருகன் (45) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீஸார், விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய சிமெண்ட் லாரி ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.