

சென்னை: மூன்று நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட 8 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அதிகளவிலான தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படிப்படியில் சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் மூலம் வந்த 3 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அதில் அவர்களது உடைகளில் தங்க கட்டிகள், தங்க பேஸ்டுகள் மற்றும் நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவைத்து. இதையடுத்து அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் தனியார் பயணிகள் விமானங்களிலும், இதேபோல தங்க கட்டிகள், நகைகள் கடத்தி வருவது தெரியவந்தது.
அதனடிப்படையில், சந்தேகப்பட்ட 6 பயணிகளை பிடித்து சோதனையிட்டனர். அவர்களும் தங்களது உடைகளில் தங்க நகைகள், கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, சிங்கப்பூர், துபாய் மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்த 9 பயணிகளிடம் இருந்து ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், தங்கம் கடத்தி வந்த 9 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.