திருவட்டாறில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை: பிரபல ரவுடி உட்பட 6 பேர் மீது வழக்கு

திருவட்டாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவிஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர்.
திருவட்டாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவிஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர்.
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரபல ரவுடி உட்பட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவட்டாறு அடுத்த பாரதபள்ளியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (37). நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இவருக்கும், வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்குமார் உள்ளிட்டோர், ஜாக்சனின் காரைஅடித்து நொறுக்கியது தொடர்பாக திருவட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு ஜாக்சனை, ராஜ்குமார் மிரட்டி வந்தாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாரத பள்ளி தேவாலயம் முன்பு சென்று கொண்டிருந்த ஜாக்சனை, 2 பைக்குகளில் வந்த 5 பேர் வழிமறித்து, கத்தியால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த ஜாக்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவனந்த புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்றுகாலை ஜாக்சன் உயிரிழந்தார்.

ஜாக்சன்
ஜாக்சன்

இது தொடர்பாக ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது திருவட்டாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர். ராஜ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினர் ஆதங்கம்: ராஜ்குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஜாக்சன் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஜாக்சனை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திருவட்டாறு காவல் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி எம்.பி. விஜய்வசந்த், எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்ளிட் டோரும் அங்கு வந்தனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்த பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in