

சென்னை: சினிமா பாடல் ஒலியை குறைக்கச் சொன்ன விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கி காவலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளிப்பாடி, நேசர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பிராஜ் (61). இவர் சென்னையில், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைசெய்து கொண்டு, திருவல்லிக்கேணி, தசூதின்கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் (மேன்ஷன்) தங்கி வந்தார். இதேபோல, விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த அய்யனார் (60) என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு, அதே மேன்ஷனில் தங்கி இருந்தார்.
கடந்த 22-ம் தேதி இரவு அய்யனார், தனது அறையில் ரேடியோவில் சத்தமாகப் பாட்டு வைத்து கேட்டுக் கொண்டு இருந்தார். இது தம்பிராஜுக்கு இடையூறாக இருந்ததால், நேரடியாக அய்யனாரிடம் சென்று ரேடியோ ஒலியைக் குறைக்குமாறு கோபமாகக் கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கட்டையால் தம்பிராஜை அய்யனார் தாக்கினார். இதில் காயமடைந்த தம்பிராஜ் மருத்துவமனையில் மரணமடைந்தார். இதுகுறித்த புகாரில் அய்யனாரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்.