

சென்னை: ஆந்திர மாநிலத்திலிருந்து சிலர், ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் அம்பத்தூர், தாம்பரம், மதுரவாயல், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சென்னை வடபழனி ரங்கப்பா நாயுடு சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மீது ஏற்கெனவே தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கு இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.