சென்னை | 34.7 டன் அரிசி பறிமுதல்: கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கும்பல் கைது

சென்னை | 34.7 டன் அரிசி பறிமுதல்: கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கும்பல் கைது
Updated on
1 min read

சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலூர், காட்பாடி, திருவலம் இ.பி சந்திப்பு அருகில் பெங்களூரு நோக்கி சென்ற டாரஸ் லாரியையும் அதைத் தொடர்ந்து லாரிக்கு துணையாக வந்த காரையும் மடக்கி நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட லாரியை சோதனை செய்ததில் அதில் 34 ஆயிரத்து 700 கிலோ (34.7 டன்) ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து காரில் வந்த ரேஷன் அரிசி உரிமையாளரான செஞ்சி சண்முகம் (52), கார் ஓட்டுநரான மோகன் (45), லாரியை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான சங்கர் (45) மற்றும் லாரி கிளீனர் ஹரிகிருஷ்ணன் (46) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது செஞ்சி சண்முகம் என்பதும், இவரதுமேற்பார்வையில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக ரேசன் அரிசியை வாங்கி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் பாபு என்ற ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத அரிசி ஆலையில் பதுக்கி வைத்து அங்கிருந்து லாரி மூலமாக கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்லும் போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட 34.7 டன் ரேசன் அரிசி மற்றும் 2 வாகனங்களை போலீஸார் கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அரிசி பதுக்கி வைக்க உடந்தையாக இருந்த பாபு என்ற ராஜமாணிக்கம் உட்பட 5 பேர் இந்த ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in