

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்துக்கு பயன்படுத்திய 6 செல்போன்களை, வழக்கறிஞர் அருள், தான் கைதாவதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்த ஹரிதரன் என்பவரிடம் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரிதரனை போலீஸார் திருவள்ளூரில் நேற்றுகைது செய்தனர். மேலும், அவரிடம், அருள் கொடுத்த 6 செல்போன்கள் தூக்கி வீசப்பட்ட இடம் குறித்து விசாரணை நடத்தினர்.
செல்போன்கள் மீட்பு: விசாரணையில், அனைத்து செல்போன்களையும் சேதப்படுத்தி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் ஹரிதரன் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றில் இறங்கி செல்போன்கள் வீசப்பட்ட இடத்தில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, 4 செல்போன்களின் பல்வேறு பாகங்களை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றினர். இது குறித்து, ஹரிதரனிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஹரிதரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் வழக்கறிஞர் அருளின் நண்பர் ஆவார். அருள் கைது செய்யப்படும் முன்பு, 6 செல்போன்களை ஹரிதரனிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ஹரிதரனை தொடர்பு கொண்ட ஹரிஹரன், அருள் கொடுத்த 6 செல்போன்களையும் தூக்கி எறியுமாறு தெரிவித்துள்ளார்.
அதன்பிறகே, ஹரிதரன் அனைத்து செல்போன்களையும் சேதப்படுத்தி கூவம் ஆற்றில் வீசியுள்ளார். ஹரிதரன், கடம்பத்தூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஆவார். இவர் திருவள்ளூர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து நீக்கம்: இதற்கிடையே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 3-வது வார்டு உறுப்பினர் ஜி.ஹரிதரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஒருங்கிணைத்த அஞ்சலை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலை, போலீஸாரால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங்கை பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்த அஞ்சலைக்கு, ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் திட்டத்துடன் இருக்கும் சில ரவுடி கும்பல்களுடன் தொடர்பு கிடைத்ததாகவும், அந்த கும்பலை சேர்ந்த அனைவரையும் ஒருங்கிணைத்து, சென்னைக்கு வெளியே தொடர்ந்து அவர்களுடன், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அஞ்சலை ஆலோசனை நடத்தி திட்டம் தீட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது வீட்டில் 5 செல்போன்கள், பென் டிரைவ், லேப்டாப், வங்கி பாஸ்புக், டெபிட், கிரெடிட் கார்டுகளும் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அந்த குழுக்களுக்கு பணம் உதவியை அஞ்சலை செய்துள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான கும்பல் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவர்களுடனான பணப் பரிவர்த்தனைகளுக்கு முக்கிய மூளையாக அஞ்சலை செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.