

திருவள்ளூர்: சென்னை - புழல் அருகே துப்பாக்கி முனையில் இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (30). சோழவரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ள இவர் மீது 5 மீஞ்சூர், காட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சோழவரம் காவல் நிலைய எல்லையில் நடந்த கஞ்சா வழக்கு தொடர்பாக 6 மாதங்களாக சேதுபதி போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இச்சூழலில், சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை எதிரொலியாக ரவுடிகளை ஒடுக்குவதில் ஆவடி காவல் ஆணையரகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்புப் படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்கள் இன்று புழல் அருகே சூரப்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த சேதுபதியையும், அவரது கூட்டாளியான காந்தி நகர் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்த பிரபு என்ற ரவுடியையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.