தாய், மகன், பேரன் மர்ம மரணம்: கருகிய நிலையில் உடல்கள் மீட்பு

கமலீஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த்குமார்
கமலீஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த்குமார்
Updated on
1 min read

விருத்தாசலம்: நெல்லிக்குப்பம் அருகே வெளியில் பூட்டுப் போட்டு பூட்டியிருந்த வீட்டுக்குள் தாய், மகன், பேரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த 3 பேரின் உடல்களும் எரிந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஓய்வுபெற்ற மருந்தாளுநர். இவரது மனைவி கமலீஸ்வரி (60). சுரேஷ்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக காலமாகி விட்டார்.

மூத்த மகன் சுரேந்திரகுமார் (42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இளைய மகன் சுகந்த்குமார் (40) ஹைதராபாத்தில் வசிக்கிறார். இவரது மகன் நிஷாந்த்குமார் (9) பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் தங்கியுள்ளார். இதற்கிடையே, சுகந்த்குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கமலீஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.

கருத்துவேறுபாடு காரணமாக, சுகந்த்குமாரின் மனைவி பிரிந்துசென்று விட்டார். இந்த நிலையில் சுகந்த்குமாரும் நெல்லிக்குப்பத்துக்கு வந்து தாயார் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கமலீஸ்வரியின் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்துநேற்று காலை புகை நாற்றம் வெளிவந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவம்நடந்த வீட்டுக்கு வந்து, வீட்டின்பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கமலீஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த் ஆகிய 3 பேரும்எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

மேலும் வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் தென்பட்டன. இதனால் யாரோ மூவரையும் கொலைசெய்துவிட்டு அவர்களை எரித்துவிட்டு, வீட்டின் வெளியே பூட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து 3பேரின் உடல்களையும் மீட்ட நெல்லிக்குப்பம் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த கடலூர் எஸ்பி ராஜாராம் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in