பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: தாராபுரத்தில் சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை

பலரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: தாராபுரத்தில் சிக்கிய பெண்ணிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர், செல்போன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியாவை (30) கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்போது, சந்தியாவுக்கு 12 பவுன் நகை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சந்தியா முன்னுக்குப் பின்முரணான தகவல்களை தெரிவித்ததால், அவரை தாராபுரம் அனைத்துமகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். போலீஸார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

தொடர் விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணமாகாத, 40 வயதைக் கடந்த ஆண்கள் பலரை சந்தியா மோசடி செய்துள்ளது தெரியவந்தது. குறிப்பாக, காவல் உதவி ஆய்வாளர், காவலர் உள்ளிட்ட பலரை ஏமாற்றித் திருமணம் செய்ததும், அவர்களுடன் மனைவிபோல சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு, நகை, பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதுபோல பலரிடம் சந்தியா லட்சக்கணக்கில் ஏமாற்றியதும், இதற்கு தமிழ்ச்செல்வி என்பவர் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், சந்தியாவை நேற்று பிடித்த தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in