சென்னை | எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: தென்னாப்பிரிக்க பெண் கைது

சென்னை | எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: தென்னாப்பிரிக்க பெண் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டிலிருந்து இதைக் கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண் கைது செய்யப்பட்டார்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னைவிமான நிலைய சர்வதேச முனையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எத்தியோப்பியா நாட்டுத் தலைநகர் அடீஸ் அபாபா நகரிலிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்சென்னைக்கு வந்தது.

அந்த விமானத்தில், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரடிலீன் ஏப்ரில் (54) என்ற பெண், சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார். அந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பெண் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று, தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது அவர் வைத்திருந்த ட்ராலி பையின் அடிப்பாகத்தில் இருந்த ரகசிய அறையைத் திறந்து பார்த்த போது, அதில் போதைப் பவுடர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர்.

மேலும், அந்த பெண் பயணியைக் கைது செய்து விசாரணைக்காக என்சிபி அதிகாரிகள் தங்களுடைய சென்னை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், அந்த போதைப் பவுடர்உயர் ரக கொக்கைன் என்பதும், ஒருகிலோ எடையுள்ள கொக்கைனின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என்பதும் தெரியவந்தது.

என்சிபி அதிகாரிகளின் தீவிர விசாரணையின் போது அந்த பெண் பயணி, ``நைஜீரியாவில் உள்ள சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து கொக்கைனை வாங்கி வருகிறேன்.

விமானத்தில் சென்னை வந்து, சென்னையிலிருந்து ரயில் மூலம்மும்பை சென்று, அங்குள்ள கும்பலிடம் 50 சதவீத கொக்கைனை ஒப்படைத்துவிட்டு, மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்குச் சென்று, அங்குள்ள கும்பலிடம் மீதமுள்ள 50 சதவீத கொக்கைனை ஒப்படைக்க வேண்டும். இதற்காக அவர்கள் பணம் கொடுப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மும்பை, டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப் பொருளை வாங்க இருந்தவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in