

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், தங்கத்தைக் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம், வான் நுண்ணறிவுப் பிரிவுஅதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடத்தி வந்தவர் கைது: இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அசோகன்(23) என்பவர், தங்கத்தை உருக்கி, தான் அணிந்திருந்த முழங்கால் உறையில் (knee cap) பசை வடிவில் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.1.16 கோடி மதிப்பிலான, ஒரு கிலோ 605 கிராம்தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தங்கம் கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.