

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 10 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தை உலுக்கியுள்ள இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பத்து தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.