

திருச்சி: லால்குடியில் முன்விரோதம் காரணமாக தமிழக வெற்றி கழக நிர்வாகியை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீஸார் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன் என்கிற நவீன்குமார் (29). தமிழக வெற்றி கழக நிர்வாகியான இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அனுசியா என்ற மனைவியும், பிரணவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் உள்ளனர். அதேபோல ஆதிகுடி கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைப்புலி ராஜா (27). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. திருவெறும்பூர் காட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கும்பலில் நவீன்குமார், ராஜா ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு அந்தக் கும்பலிலிருந்து நவீன் குமார் பிரிந்து சென்றார். அப்போதிலிருந்தே ராஜாவுக்கும் நவீன்குமாருக்கும் இடையில் யார் பெரியவர் என்ற பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இருவரும் பேசிக்கொள்வதை தவிர்த்து விட்டனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மலையப்பபுரத்தைச் சேர்ந்த ராஜாவின் நண்பர் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராஜா, நவீன் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர்.
அப்போது, ராஜா போதை தலைக்கேறிய நிலையில், “நீ என்ன பெரிய ஆளா?” என்று கேட்டு நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், கோபமடைந்த நவீன் குமாரின் நண்பர் லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த ராஜா, நவீன்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு ஜூலை 3-ம் தேதி லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் பகுதிக்கு நவீன்குமாரை அவரது நண்பர்கள் மூலம் வரவைத்தார்.
அங்கு ராஜா, நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, நவீன்குமாரின் நண்பர்கள் குடி போதையில் தள்ளாடியதால் அவர்கள் அனைவரையும் தனது நண்பர்களின் பைக்கில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் நவீன்குமார். இதன் பிறகு ராஜாவும் அவரது நண்பர்களும் நவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.ரத்த வெள்ளத்தில் சரிந்த நவீன்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லால்குடி போலீஸார், நவீன்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ராஜா, ஸ்ரீநாத் உட்பட 6 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் ரவுடி ராஜா பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸாரைக் கண்டதும் பதற்றமான ராஜா, அவர்களைத் தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து போலீஸார் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கிப் பிடித்தனர். காலில் துப்பாக்கிக் குண்டடி பட்ட ரவுடி கலைப்புலி ராஜாவை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிகிச்சைக்காக சேர்த்துள்ள போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.