

சென்னை: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இன்று (வியாழக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் பூந்தமல்லி - சிறுசேரி மார்க்க மெட்ரோ ரயில்கள் இணைப்பு முனையமாக மாற்றபட உள்ளது. இந்த நிலையில், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறப்புப் படை போலீஸார் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. எனினும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின் அனுமதிக்குமாறு மெட்ரோ ஊழியர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.