

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.167 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனைய புறப்பாடு பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி டிரான்சிட் பயணிகள் மூலமாக 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் சபீர் அலி, கடை ஊழியர்கள் 7 பேர் மற்றும் ஒரு டிரான்சிட் பயணி என 9 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னை விமான நிலைய அதிகாரி, விமான நிலையங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்வதற்கும், கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மூடப்பட்ட 2 கடைகள்: இது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தங்கக் கடத்தல் நடந்திருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் அங்குள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டுள்ளது. அந்த 2 கடைகள் மீது சந்தேகம் இருப்பதால், அக்கடைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.