

மும்பை: மும்பையில் 72 வயது தொழிலதிபருக்கு மர்ம நபர்கள் போன் செய்து தங்களை காவல் துறை மற்றும் சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர், பண மோசடி வழக்கு ஒன்றுடன் அந்தத் தொழிலதிபரின் ஆதார் எண் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து அவரை கைது செய்ய இருப்பதாக மிரட்டினர்.
இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தத் தொழிலதிபர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உண்மையான குற்றவாளியைப் பிடிக்க பணம் தர வேண்டும் என்று மோசடியாளர்கள் தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
பயத்தில் அவரும் தன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3.98 கோடி பணத்தை மோசடியாளர்கள் கூறிய கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த மோசடியாளர்கள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் அவருக்கு வரவில்லை. இதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அந்தத் தொழிலதிபருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மும்பை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கிய மும்பை போலீஸார், கேரளாவைச் சேர்ந்த அனுப் குமார் (45) மற்றும் முகம்மது அபூபக்கர் (29) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.அபூபக்கர் துபாயில் இருந்தபடி, தாய்லாந்து நாட்டு போன் நம்பர் மூலம் பேசி தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.