

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் பாழடைந்த கோழிப் பண்ணையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக சில தினங்களுக்கு முன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸார் மேற்கொண்ட தொடர் கண்காணிப்பில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் முருகன், டில்லிபாபு ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையைச் சுற்றி வளைத்தனர்.
இதையறிந்த அந்த கும்பல், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு ஜீப்பில் தப்பியது. கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் கண்ணம்பாக்கம் சந்திப்பில், தனது ஜீப்பை குறுக்கே நிறுத்தி அந்த கும்பலை வழி மறித்தார். அப்போது, அந்த கும்பல் சென்ற சரக்கு ஜீப், டிஎஸ்பி ஜீப்பை இடித்துத் தள்ளிவிட்டு, கவரைப்பேட்டை நோக்கி வேகமாகச் சென்றது.
போலீஸார் ஜீப்கள், மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றபோது, வடமாநில கும்பல் குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள தைல தோப்புக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டது. போலீஸார் அங்கு தீவிரமாகத் தேடிய நிலையில், தைலத் தோப்பிலிருந்து வெளியேறிய அந்த கும்பல் சின்னபுலியூர் வழியாகத் தப்ப முயன்றது.
மீண்டும் போலீஸார் அவர்களை, பெரிய புலியூர், தேர்வாய், தேர்வாய் கண்டிகை சிப்காட் வழியாக விரட்டிச் சென்றனர். அப்போது, சரக்கு ஜீப்பின் பின்புறத்தில் அமர்ந்திருந்த 3 பேர், போலீஸாரின் ஜீப் மீது கற்களை வீசித் தாக்கினர்.
வடமாநில கும்பல், ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லை வழியாகத் தப்ப முயன்றதால், தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸார், பாலவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே லாரி ஒன்றை நிறுத்தி, அக்கும்பலுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த வடமாநில கும்பலைச் சேர்ந்தவர்கள், சரக்கு ஜீப்பில் இருந்து கீழே இறங்கி ஆளுக்கு ஒரு திசையாக தப்ப முயன்றனர். அவர்களை போலீஸார் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
திரைப்பட பாணியில் நடந்த போலீஸாரின் இந்த 2 மணி நேர துணிகரப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:
கைதானவர்கள் ஹரியானா மாநிலம், மேவட் தாலுகாவை சேர்ந்த அஸ்லாம் கான்(44), அல்டாப்(37), சலீம்(32), ஆஷிப்கான் (24) மற்றும் கவரைப்பேட்டை அருகே உள்ள கிளிக்கோடி கிராமத்தை சேர்ந்த திவாகர்(25) என்பது தெரிந்தது.
மாடு திருடுபவர்களான இவர்கள், கடந்த 4 மாதங்களாக பாழடைந்த கோழிப் பண்ணையில் தங்கியபடி, இரவு வேளையில், சரக்கு ஜீப் மூலம் ஆந்திர மாநில பகுதியில் சாலையோரம் சுற்றித் திரிந்த மாடுகளைத் திருடி வந்துள்ளனர். திருடிய மாடுகளை கோழிப் பண்ணையில் அடைத்து வைத்து, 15 மாடுகள் சேர்ந்ததும், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீஸார், கைதானவர்களிடம் இருந்து, சரக்கு ஜீப், மாடு பிடி கயிறுகள், கத்திகள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், பாதிரிவேடு போலீஸார், கைதானவர்களின் குற்ற சரித்திரத்தை ஹரியானா மாநில போலீஸாரிடம் விசாரித்து வருகின்றனர்.