

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நான்கு இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை அதிகாரிகள் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்போடு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு முகமையின் டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகள், தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரை நடைபெற்றது. அதேபோல் சாலியமங்கலம் பகுதியில் முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற சோதனை காலை 11:30 மணியளவில் நிறைவுற்றது. சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்களை விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றார்கள். சோதனையின் போது பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.