Published : 30 Jun 2024 09:06 AM
Last Updated : 30 Jun 2024 09:06 AM
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, முகநூலில் நிக்கோலஸ் ஆண்ட்ரூஸ் மோரீஸ் என்ற பெயரில் செயல்பட்ட நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பரிசு பார்சல் அனுப்புவதாக பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களில் அப்பெண்ணை செல்போனில் அங்கீதாஎன்ற பெயரில் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சுங்கத் துறை ஊழியர் போல.. சுங்கத் துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறிய அவர், 70,000 பவுண்ட்ஸ் பணம், நகை மற்றும் ஐபோன் ஆகியவை பார்சலில் வந்துள்ளதாகவும், பார்சலைப் பெறுவதற்கு செயலாக்க கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்தப் பெண் பல தவணைகளாக, பணம் அனுப்பும் செயலிகள் மூலம்மொத்தம் ரூ.38,19,300 அனுப்பியுள்ளார். ஆனால் பார்சல் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.
ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த முத்து (32) என்பவர், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த முத்துவை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT