

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதில் 4 சுற்றுலா வேன்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றுலா வேன் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின், வேன் வாடகை மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் நேற்று (ஜூன் 28) இரவில் வெளியூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளூர் வேன் ஓட்டுநர்கள், மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டு விரட்டி அனுப்பினர். இதில் மோதல் ஏற்பட்டு உச்சிப்புளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக் (27) என்பவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, நள்ளிரவில் குடிபோதையில் மீண்டும் ராமேசுவரம் வேன் நிறுத்தத்திற்கு வந்த வெளியூர் கார் ஓட்டுநர் கார்த்திக் உள்ளிட்ட சிலர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களில் பெட்ரோல் குண்டு வீசியும், கல்லையும் எரிந்தனர். இதில் நான்கு வேன்களின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுடன், வேன்களும் சேதமடைந்தது. இது தொடர்பாக ராமேசுவரம் வேன் ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை செய்து, உச்சிப்புளியைச் சேர்ந்த கார்த்திக் (27), இவரது அண்ணன் முனீஸ்வரன் (31), இவர்களது உறவினர் காளீஸ்வரன் (30) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முனீஸ்வரன், காளீஸ்வரனை கைது செய்தனர். தலையில் காயமடைந்த கார்த்திக், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.