

சென்னை: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் கவுதம் சந்த் போத்ரா (61). இவர் தி.நகரில் தங்க நகை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு அதே பகுதியில் நகைப் பட்டறையும் உள்ளது. இந்த பட்டறை, நிறுவனத்தில் உள்ள நகைகளை அதன் நிர்வாகிகள் அண்மையில் தணிக்கை செய்தனர்.
அப்போது 1,240 கிராம் தங்கம் மற்றும் 140 கேரட் வைரம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நகைகளை இங்கு பணி செய்த மேலாளர் மற்றும் ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து சிறுகச் சிறுக திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், தங்க நகை நிறுவனம் மற்றும் நகைப் பட்டறை ஊழியர்களே நகைகளைத் திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக தங்கப் பட்டறை மேலாளர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பீரித்தம் கங்குலி (25), அந்நிறுவனத்தில் பணி செய்த மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பூர் பிரதீப் (30), அதே பகுதி அருண்ராஜ் (27), முருகராஜ் (31), மேற்கு தாம்பரம் சதீஷ்குமார் (40) ஆகிய 5 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 259 கிராம் தங்க நகைகள் மற்றும் 37.618 கேரட் வைரங்கள், ரூ.6,98,960 ரொக்கம், ஐ-போன், இருசக்கர வாகனம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள பீரித்தம் கங்குலி, திருடிய நகைகளை விற்று தனது சொந்த ஊரான மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் வீடு கட்டியுள்ளதும், பிரதீப் தனது சொந்த ஊரில் இடம் வாங்கியுள்ளதும் தெரிந்தது. தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.