Published : 29 Jun 2024 06:10 AM
Last Updated : 29 Jun 2024 06:10 AM
சென்னை: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் இஸ்திரிபோடும் தொழிலாளியாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற தொழிலாளர்கள் போர்வையில் குற்ற பின்னணி கொண்டவர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள், தேடப்படும் தீவிரவாதிகள் சிலரும், சில நேரங்களில் தமிழகம் வந்து, கிடைக்கும் வேலைகளை செய்துவருவார்கள். அவர்கள் கைது செய்யப்படும்வரை அவர்களுடன் பணி செய்பவர்களுக்கு கூட அவர்கள் யார் என்று தெரியாது என கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்களாக மேற்குவங்க மாநில போலீஸார் சென்னையில் முகாமிட்டு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அம்மாநிலபோலீஸார் நேற்று காலை கோயம்பேடு காவல் நிலையம் வந்து, ‘‘மேற்குவங்க மாநிலம் காங்க்சா காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷேக் கனவார் (30) என்பவர்சென்னையில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவரை கைது செய்ய உதவி செய்யும்படி’’ கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் கொடுத்த அடையாளங்களை வைத்து கோயம்பேடு போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மேற்குவங்க மாநில போலீஸாரால் தேடப்பட்டுவந்த ஷேக் கனவார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு பகுதி அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கி, இஸ்திரி போடும் வேலை செய்து வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இவர் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகவும், அல்-கொய்தா மற்றும் பங்களாதேஷ் நாட்டில் செயல்படும் மத அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஆதரவாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேற்குவங்க போலீஸார் அவர்களது மாநிலத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இவர் சென்னையில் தங்கி ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரிந்தாரா என்ற கோணத்தில் சென்னை போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT