

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்-கீதா தம்பதி மகன் கார்த்தி(36). கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, பெற்றோருடன் வசித்து வந்த கார்த்தி, அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு வந்து, பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதேபோல, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கார்த்தி, தாய் கீதாவுடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது,தந்தை சீனிவாசன் அவரைத் தடுத்து, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கார்த்தி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சீனிவாசனைக் கைது செய்தனர்.