

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளையில், கேரளாவைச் சேர்ந்த வியாபாரியை காருக்குள் கொலை செய்து,ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களியக்காவிளையை அடுத்த ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் இரவு கேரள பதிவெண் கொண்ட கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, காருக்குள் இளைஞர்ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். காரில் கிடந்தவரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விசாரணையில், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கைமனம் விவேக்நகர் பகுதியைச் சேர்ந்த தீபு (44)என்பதும், கட்டிடப் பணிக்கான கருங்கற்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரது மனைவி விதுமோள் பாலக்காட்டில் உள்ளஅரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ரூ.10 லட்சம் பணத்துடன்.. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: வியாபார விஷயமாக கேரளாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூ.10லட்சத்துடன் தீபு சென்றுள்ளார். அவருடன் கார் ஓட்டுநரும் சென்றுள்ளார்.
கார் நின்ற ஒற்றாமரம் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தீபு சென்ற காரின் பின் இருக்கையில் மற்றொருவர் ஏறியதும், அவர் தீபுவைக் கொலைசெய்துவிட்டு, ரூ.10 லட்சத்தைபறித்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. கார் ஓட்டுநர் மற்றும் காரில் ஏறிய மற்றொரு நபரைத் தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.