

கோவை: மோசடி நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் காவல் துறையை அணுகி இழந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை டாடாபாத், டாக்டர் ராஜேந்திரபிரசாத் சாலையில் செயல்பட்டு வந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் சுந்தரம் பைனான்ஸ் குழுமம் ஆகிய நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் பெயரில் பெற்றுக்கொண்ட பணத்தை திரும்ப வழங்காமல், மேற்கண்ட நிதி நிறுவனங்களை மூடிவிட்டது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கண்ட நிதி நிறுவனங்களின் சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு, அவற்றை விற்பனை செய்து, அத்தொகை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன்படி திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட நிறுவனங்களில் முதலீடு செய்து இன்னும் பணத்தை திரும்பப் பெறாமல் உள்ளவர்கள் உடனடியாக தங்கள் கைவசம் உள்ள சான்றுகளுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தையோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக புதிய கட்டிடத்தில் முதல் மாடியில் உள்ள டான்பிட் பிரிவையோ அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
வரும் ஜூலை 21-ம் தேதிக்குள் மேற்கண்ட அலுவலகங்களை அணுகி தங்களது முதலீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டோர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தேதிக்கு பின்னர், அரசு வசம் உள்ள இருப்புத் தொகையானது நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.