பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு ஐகோர்ட் ஜாமீன்

பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரிக்கு ஐகோர்ட் ஜாமீன்

Published on

சென்னை: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிகிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், ஜனவரி மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் அந்த பெண் கேரளாவுக்கு வந்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை கார்த்திக் முனுசாமி தாக்கல் செய்தார்.

அப்போது, காவல்துறை மற்றும் புகார் அளித்த பெண் தரப்பிலும் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வாரத்துக்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in