

குவஹாதி: அசாம் மாநிலத்தில் ரூ.9 கோடிமதிப்புள்ள யாபா போதை மாத்திரைகளை அசாம் போலீஸாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களில் பல வகை உள்ளன. மெத்தம்பேட்டமைன் என்ற சக்தி வாய்ந்த போதைப் பொருளுடன், நரம்பு மண்டலத்தை தூண்டும் கஃபைன் சேர்த்து தயாரிக்கப்படுவதுதான் யாபா போதை மாத்திரை. அசாம்மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் இருவர் 30,000 யாபா மாத்திரைகளை கடத்துவதாக அசாம் போலீஸாருக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து இருதரப்பினரும் கூட்டாக நடத்திய சோதனையில் 30,000 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த கடத்தல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மிகப் பெரியளவிலான போதை பொருளை கைப்பற்றி,அசாம் மாநிலத்தை போதைப்பொருள் இல்லா மாநிலமாக்கு வதற்கு போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் மேற் கொண்ட முயற்சிகளை மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.