

சென்னை திருமங்கலத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி கணவரை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன் (42). இவர்கள் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். சீனிவாசன் நேற்று மாலை 4 மணி அளவில் திருமங்கலம் 6-வது அவென்யூ வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல், சீனிவாசனை வழிமறித்து வெட்டியது. உயிரை காப்பாற்ற தப்பியோடிய அவரை கும்பல் விரட்டி விரட்டி வெட்டியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். திருமங்கலம் காவல் ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனிவாசனை வெட்டிவிட்டு தப்பிய கும்பலை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சூளைமேடு பகுதியை சேர்ந்த நாய் பாபு என்பவருக்கும், சீனிவாசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் சீனிவாசனை பாபு போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. நாய் பாபு மற்றும் சிலர்தான் சீனிவாசனை வெட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீஸார் விசாரிக்கின்றனர்.