வாசனை திரவிய நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன துகள்கள், கட்டைகள் பறிமுதல்

வாசனை திரவிய நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தன துகள்கள், கட்டைகள் பறிமுதல்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் அருகே வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தனத் துகள்கள் மற்றும் கட்டைகளை தமிழக வனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, சேலத்தில் வனத் துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சந்தனக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 1.5 டன் எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான சந்தனக் கட்டைகளை வனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில், அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வரும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சந்தனக் கட்டைகளை கடத்திக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேலம் உதவி வனப் பாதுகாவலர் செல்வகுமரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாயக்கால் கிராமத்தில் உள்ள வாசனைத் திரவியம் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக 156 பைகளில் சந்தனக் கட்டைகள், 53 பைகளில் சந்தன துகள்கள் இருந்தன. மேலும், சில வகை எண்ணெய்களும் இருந்தன. ஆனால் அதற்குண்டான ஆவணங்கள் இல்லை. இரண்டாவது நாளாக நேற்றும் அங்கு தமிழக வனத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர்,அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் சந்தனத் துகள்கள் மற்றும் கட்டைகளை நீதிமன்ற் அனுமதியுடன் பறிமுதல் செய்து, சேலத்துக்கு கொண்டுசென்றனர்.

விசாரணைக்குப் பிறகே சந்தனக் கட்டை களின் மதிப்பு, கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிறுவனத்துக்கு `சீல்' வைப்பு: தமிழக வனத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக் கையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு புதுச்சேரி வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று மாலை `சீல்' வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in