

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற சுவீட் தினேஷ் (27). இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் உள்ள மதுபான பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் தினேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி சந்தோஷ் என்பவரை தினேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வெட்டியுள்ளனர். இந்த முன் விரோதத்தில் தற்போது தினேஷ் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இரு ரவுடிகள் தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.யுவராஜ் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இக்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து மெத்தனமாகச் செயல்பட்டு, கொலை குற்றத்தை தடுக்கத் தவறிய காரணத்துக்காக, காவல் ஆய்வாளர் யுவராஜை, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்து நேற்றுஉத்தரவு பிறப்பித்தார்.
4 பேர் கைது: இதனிடையே, ரவுடி தினேஷ் கொலை தொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (23), அவரது கூட்டாளிகள் கொடுங்கையூர் அருண்குமார் (19), தண்டையார்பேட்டை சிவகுமார் (23), லோகேஷ் (19) ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.