

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கனிம வளங்களைஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்துக்கு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாறைக் கற்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
கேரளா செல்லும் கற்கள்: கேரளாவில் மலைகளை உடைத்து கற்கள் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால், அங்குகனிமவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதேநேரம், தமிழகத்திலிருந்து கனிம வளங்கள் விதிகளை மீறி தொடர்ச்சியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கனரக லாரிகளில் கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொடர்ந்துஎதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஆரல்வாய் மொழியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
வைரலான வீடியோ... இங்கு பணியில் உள்ள போலீஸார், கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதைத் தடுப்பது, முறையான பாஸ் உள்ளதா என்று ஆய்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களிடம் போலீஸார் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
அந்த வீடியோவில், காவலர் ஒருவர் பணத்தை வாங்கி பக்கத்தில் இருக்கும் அட்டைப் பெட்டிக்குள் போடுவது, பதிவேட்டுக்கு அடியில் மறைத்து வைப்பது, அருகே இருந்த மேலும் 2 போலீஸார் லாரிக்கான அனுமதிச் சீட்டை ஆய்வு செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விசாரணை நடத்தி,ஆரல்வாய்மொழி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜான்போஸ்கோ, இரணியல் காவல் நிலைய தலைமைக் காவலர் தர்மராஜ், ஆசாரிபள்ளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பேச்சிநாதபிள்ளை ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.