

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநில பெண் பயணியின் தங்க நகை அடங்கிய பையை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வினீத் உபாத்யாய்.
இவரது மனைவி லியோனி ஸ்மித். இவர்கள் 15 பேருடன் தமிழகத்தில் சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க வந்திருந்தனர். தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 3-ம் தேதி காலை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து, அங்கிருந்து அன்று இரவு தன்பாத் விரைவு ரயிலில் ஜார்க்கண்ட்க்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.
பின்னர், ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தனர். காத்திருப்போர் அறையில் லியோனி ஸ்மித் அருகே பின்பக்கத்தில் ஒரு நபர் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் சென்றுவிட்டார்.
இதற்கிடையே, லியோனி ஸ்மித் தனது செல்போனை வைக்க கைப்பையை தேடியபோது, அது மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் செய்தார். புகாரில், தனக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் எனது பையை எடுத்து இருப்பார் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதில் ஒரு பவுன் தங்க நகை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில், சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து, அந்த நபரை தேட தொடங்கினர். முதல்கட்டமாக, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பழைய குற்றவாளியாக இருக்குமோ என்று சந்தேகத்தின் பேரில் தேடினர்.
இந்நிலையில், அந்த நபர் மீண்டும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 5-ம் தேதி இரவு வந்தார். இதை சிசிடிவியில் பார்த்த போலீஸார், அந்த நபரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து, ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது, அவர் விருதுநகரைச் சேர்ந்ததாஸ்(44) என்பது தெரிநதது. கைப்பையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து ஒரு பவுன் நகையை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.