Published : 06 Jun 2024 06:20 AM
Last Updated : 06 Jun 2024 06:20 AM
சென்னை: திருடிய வீட்டில் செல்போனை தவறவிட்டுச் சென்றவர் கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் மேற்கு, விஜிபி நகர், பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் வையாபுரி (68).ராணுவத்தில் அதிகாரியாக பணி யாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 31-ம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
செல்போனை விட்டுச் சென்றார்: இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக போலீஸார், திருட்டு நடைபெற்ற வீட்டில் ஏதாவது தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்களா எனச் சோதனை நடத்தினர். அப்போது, செல்போன் ஒன்று அங்கே கேட்பாரற்று கிடந்தது. அதை ஆய்வு செய்தபோது, திருடியவர்களில் ஒருவர் அவரது செல்போனை அங்கேயே மறந்து விட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது.
அந்த செல்போனை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கியதில், அந்த வீட்டில் கைவரிசை காட்டியது ஆவடி நந்தனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த அகில் (21), அவரது கூட்டாளிகள் காஞ்சிபுரம் மாவட்டம், அரவிந்த் நகர் விக்கிவசந்த் (19), திருமுல்லைவாயல் அன்னை சத்யாநகர் ஸ்ரீதர் (26) என்பது தெரியவந்தது.
3 பேர் கைது: தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். திருடப்பட்ட 18 பவுன் நகை, பணம் ரூ.16,500 மற்றும் திருடிய பணத்தில் வாங்கிய 2 புதிய செல்போன்கள் உட்பட3 செல்போன்களை அவர்களிட மிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT