

சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலி கிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூசாரி கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனக்கும், தனக்கு எதிராக புகாரளித்த பெண்ணுக்குமிடையே சமரசம் ஏற்பட்டு விட்டது என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தி்ல் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரனையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.