Published : 04 Jun 2024 06:10 AM
Last Updated : 04 Jun 2024 06:10 AM
பூந்தமல்லி: மாங்காடு பகுதியில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணை ஏமாற்றி நகை பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி(45).இவர், தன் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மறுமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் இருந்த தகவல்களை பார்த்த கோயம்புத்தூரை சேர்ந்தயுவராஜ்(50), கடந்த சில மாதங்களாக காயத்ரியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் யுவராஜ், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கண் திருஷ்டி பரிகாரம் செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் ஒரு கோயிலுக்கு 5 பவுன் நகையுடன் வரவேண்டும் என, காயத்ரியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த மாதம், காயத்ரி 5 பவுன் நகையுடன் தாம்பரத்துக்கு வந்தநிலையில், அங்கே காத்திருந்த யுவராஜ், காயத்ரியை அழைத்துக்கொண்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் சுவாமி தரிசனம் செய்த நிலையில், ஒரு பாத்திரத்தை வாங்கி வந்த யுவராஜ், அதில் 5 பவுன் நகையை போடும்படி கூறியதால், காயத்ரி 5 பவுன் நகையை போட்டுள்ளார்.
தொடர்ந்து, அந்த பாத்திரத்தை மூடிய யுவராஜ், அதனை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு 3 நாட்கள் கழித்து திறந்து பார்க்கவேண்டும். அப்போதுதான் கண்திருஷ்டி போகும் என கூறியுள்ளார்.
இதனை நம்பி காயத்ரியும் அந்த பாத்திரத்தை எடுத்து சென்று வீட்டின் பூஜை அறையில் வைத்து விட்டு மறுநாள் யுவராஜுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த காயத்ரி அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் வளையல்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, யுவராஜை தேடி வந்தனர்.
போலீஸார் தீவிர விசாரணை: இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ், காயத்ரியை ஏமாற்றியது போன்று, மேலும் ஒரு பெண்ணை ஏமாற்றுவதற்காக நேற்று முன் தினம் சென்னை வந்தபோது, போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், யுவராஜிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், யுவராஜ் கன்னியாகுமரியிலும் இதே போல் ஒரு பெண்ணை ஏமாற்றி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT