

சென்னை: உயர்ரக கஞ்சாக்களை சென்னைக்கு கடத்தியதாக தலைமறைவாக இருந்த பெங்களூரு ஐடி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம் போலீஸார், கடந்த மாதம் 14ம் தேதி 200 அடி ரேடியல் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது ஆட்டோவில் பயணித்த இளைஞரின் பேக்கில், உயர்ரக, 6.5 கிலோ கஞ்சா இருந்தது. போலீஸார் விசாரணையில், அந்த இளைஞர், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாச ராகுல் (29) என்பதும், பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு இந்த கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஷேக் இப்ராஹீம் (29), என்பது தெரியவர, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி, மன்னார்புரம், புதிய காலனியில் ஷேக் இப்ராஹீம் பதுங்கியிருப்பதாக தகவல் வர, அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்து, மடிப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து வைத்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.