திருடவந்த வீட்டில் குளுகுளு ஏசி காற்றில் அயர்ந்து தூங்கிய திருடன் @ உ.பி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் திருட வந்த வீட்டில் ஏசி இயந்திரத்தை ஓட் விட்டு குளுகுளு காற்றில் அயர்ந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை லக்னோவின் இந்திரா நகர் பகுதியில் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த செயல் நகைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடு சுனில் பாண்டே என்ற மருத்துவருக்கு சொந்தமானது. அவர் வாராணசியில் பணியாற்றி வருகிறார். அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டின் ஓர் அறையில் ஏசி இருந்துள்ளது. அதை ஆன் செய்த அந்த திருடன், தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிட வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அது குறித்த தகவலை மருத்துவர் சுனில் வசம் தெரிவித்துள்ளனர். அவர் உள்ளூரில் இல்லாத காரணத்தால் தகவலை காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்துள்ளனர். அப்போது அந்த திருடன் ஒரு கையில் போனை பிடித்தபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க திருடனை எழுப்பிவிட்டு போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார், “அந்த நபர் திருடும் நோக்கத்தில் தான் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆனால், ஏசி இயந்திரத்தை ஆன் செய்து தூங்கியுள்ளார். அவர் மது போதையில் இருந்த காரணத்தால் அப்படிச் செய்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in